×

3வது டெஸ்டில் கம்மின்ஸ் இல்லை கேப்டன் பொறுப்பில் ஸ்மித்

இந்தூர்: தாயாரின் உடல்நல பாதிப்பு காரணமாக நாடு திரும்பியுள்ள  பேட் கம்மின்ஸ், இந்தூரில் நடக்க உள்ள 3வது டெஸ்டுக்கு முன்பாக இந்தியா வர வாய்ப்பு இல்லாததால் அவருக்கு பதிலாக ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்பட உள்ளார். பேட் கம்மின்ஸ் தலைமையில் இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 டெஸ்டிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை வகிக்க, 3வது டெஸ்ட் மார்ச் 1ல் இந்தூரில் தொடங்குகிறது.

இதற்கிடையில், தனது அம்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து கேப்டன் கம்மின்ஸ் சில நாட்களுக்கு முன்பு ஆஸி. புறப்பட்டுச் சென்றார். அவர் 3வது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு இந்தியா வந்து அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், ‘எனது அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் இந்தியா வருவதை தவிர்க்க முடிவு செய்துள்ளேன். இந்த நேரத்தில் அவருடன் இருப்பதுதான் சரியானதாக இருக்கும் என்று உணர்கிறேன். கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் சக வீரர்களிடமிருந்து எனக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 3வது டெஸ்டுக்கு ஆஸி. கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். கம்மின்சுக்கு பதிலாக காயத்தில் இருந்து மீண்டுள்ள மிட்செல் ஸ்டார்க் அல்லது ஸ்காட் போலண்ட் ஆகியோரில் ஒருவர் களம் காணும் வாய்ப்பு உள்ளது.
அடுத்தடுத்து வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகி வருவது ஆஸி. அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஜோஷ் ஹேசல்வுட், டேவிட் வார்னர் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளனர். ஏற்கனவே காயத்தால் ஓய்வில் இருந்த கிளென் மேக்ஸ்வெல்,  மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஒருநாள் தொடருக்காக இந்தியா வர உள்ளனர்.

Tags : No Cummins ,Smith , No Cummins in 3rd Test, Smith as captain
× RELATED அரிதான நோய் பாதிப்பு!: 2 ஆண்டுகளில்...